செவ்வாய், 19 ஜூலை, 2016

வெற்றியின் இருபடிகள்

வெற்றியின் இருபடிகள்
                                                                                  - குமரி ஆதவன்
                பிறர் மீது கொள்வது நம்பிக்கை; தன் மீது கொள்வது தன்னம்பிக்கை. இந்த நம்பிக்கைதான் மனிதனின் ஒவ்வொரு நிமிடத்தையும் நகர்த்திக் கொண்டிருக்கிறது.
                ஜீரணமாகும் என்ற நம்பிக்கையில் தான் சாப்பிடுகிறோம்; உயிர் வாழ்வோம் என்ற நம்பிக்கையில் தான் சுவாசிக்கிறோம்; எழுவோம் என்ற நம்பிக்கையில் தான் உறங்குகிறோம்.
                மனைவியை நம்பாதவன் எப்படி அவளோடு ஒரே வீட்டில் வசிக்க முடியும்?
                நம்பிக்கை தகர்ந்து போகின்ற போது அச்சம் ஆட்சி செய்ய ஆரம்பிக்கும். தன்னோடு இருப்பவர்களை நம்ப மறுக்கும் போது, கொன்று போடுவார்களோ என்ற அச்சம் ஆட்டிப் படைக்கும். அதற்குப் பிறகு எப்படித் தூக்கம் வரும்?
                நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களும் நம்பிக்கையின் வெளிப்பாடு தான். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தான் தேர்தலில் நிற்கிறோம்; தேர்வு எழுதுகிறோம். பின் எப்படி தோல்வி வருகிறது என்று நீங்கள் கேட்கலாம்,
                இங்கு தோல்வி அடைபவர்களே கிடையாது.  நான்கு வாக்குகள் பெற்றிருப்பவன்  கூட நான்குபேரின் மனதில் வெற்றி பெற்றிருக்கிறான். முதலிடத்திற்கு முன்னேறுகிற முயற்சிதான் இனி தேவை!
                நூற்றுக்கு முப்பது மதிப்பெண்களைப் பெற்றவன் கூட முப்பது மதிப்பெண்களுக்கான கேள்விகளை வென்றவன் தான். சமூகம் ஏற்படுத்தியிருக்கிற இலக்கை நோக்கி முன்னேற முயற்சி செய்வது தான் அடுத்தகட்ட வேலை!
                “நம்பிக்கை என்ற உணர்வு இறைவனால் அருளப்பட்ட அன்புக்கயிறு. இந்தப் அன்புக் கயிறு உலகத்தில் உள்ள அனைத்தையுமே ஒன்றையொன்று பிணைத்து நிற்கிறதுஎன்கிறார் சுவாமி விவேகானந்தர்.    
                உலகில் உலாவந்த ஒவ்வொரு புரட்சியும் சில மனிதர்களின் நம்பிக்கையின் வெளிப்பாடுகள் தான்.   
                மகாத்மா காந்தி இந்தியாவுக்கு விடுதலை கிடைக்குமென்ற நம்பிக்கையில்தான் தன் அகிம்சைப் போராட்டத்தைக் துவக்கினார்ஒவ்வொரு வீரனும் நம்பிக்கையயோடு தான் போர் புரிகிறான்; நம்பிக்கை இழப்பவன் அச்சப்பட்டுப் பின்வாங்குகிறான்.
                “அகிம்சை என்று நான் கூறுவதற்கு அடிப்படையே பரஸ்பர நம்பிக்கைதான். ஒரு விரோதியை விரோத மனப்பான்மையினால் வென்றுவிட முடியாது. அவ்வாறு தற்காலிகமாக நாம் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி நிரந்தரமாக இருக்காது. ஒரு விரோதியை அவன் மீது கொள்ளும் நம்பிக்கையினாலேயே வென்று விட முடியும். நம்பிக்கை என்று நான் கூறுவதை அன்பு என்றும் பொருள் கொள்ளலாம்என்கிறார் மகாத்மா காந்தி.
                இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடிய வள்ளுவரும் கூட,
                “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
                நன்னயம் செய்து விடல்”  என்கிறார்.
                “கடவுளை நம்ப மறுப்பவன் தன்னையும், சக மனிதர்களையும் நம்ப மறுக்கிறான்என்கிறார் கபீர் தாசர்.
                எவ்வளவு தான் உடல் வலிமை பெற்றிருந்தாலும், தன்னையும் சக மனிதனையும் நம்பாதவன் வாழ்க்கை அச்சம் நிறைந்ததாகவும், உலகத்திற்கு பயனற்றதாகவும் தான் அமையும்.
                நம்பிக்கை என்ற படிக்கட்டில் ஏறி தன்னம்பிக்கை என்ற உச்சியை அடைபவன்தான் வெற்றி மகுடத்தைத் தரிக்க முடியும். தன்னம்பிக்கை இல்லாதவனால் தன்னையும் நேசிக்க முடியாது; பிறரையும் நேசிக்க இயலாது.
                கண்களே இல்லாத சுரேஷ் குமார் என்பவர் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் ஆங்கிலத்துறை போராசியராக உள்ளார். ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் சனாதிபதி விருதைப் பெற்றிருக்கிறார்.
                இரு கால்களையும் குழந்தைப் பருவத்திலேயே இழந்த மாசிலாமணி அவர்கள் இந்தியன் வங்கியில் காசாளராகப் பணியாற்றுகிறார். இவருக்கு சனாதிபதி விருது அளிக்கப்பட்டபோது சக்கர நாற்காலியில் செல்ல மறுத்து தரையில் ஊர்ந்து சென்றே விருதினைப் பெற்றுக் கொண்டார். மக்கள் வியந்தனர்; தன்மைபிக்கையோடு ஊர்ந்து சென்று விருது பெற்ற இவரை உலகமே உற்று நோக்கியது!
                இவர்களின் வெற்றிக்குக் காரணமென்ன? தன்னம்பிக்கை .... தன்னம்பிக்கை!
                வெற்றியாளர்களை சந்தித்துக் கேளுங்கள். அவர்கள் ஒரே நாளில் இந்த வெற்றியைப் பெறவில்லை. எத்தனையோ சோதனைகளை எதிர்கொண்டிருப்பார்கள்;எத்தனையோ இழப்புகளை சந்தித்தி ருப்பார்கள். ஆனால் எந்த நிலையிலும் தன்னம்பிக்கை இழந்து சோர்ந்து உட்கார்ந்திருக்க மாட்டார்கள்.
                மாவீரன் பகத்சிங் தூக்குக் கயிற்றை முத்தமிடும் போதுகூட, ‘இந்தியா சுதந்திரம் அடையும்; அதற்காக பல்லாயிரம் பகத்சிங்குகள் உருவெடுப்பார்கள்என்று நம்பினான். அவன் நம்பிக்கை வீண் போகவில்லை.
                நம் கண்களுக்கு முன் எத்தனையோ பேர் தன்னம்பிக்கையோடு வெற்றியாளர்களாக பவனி வருகிறார்கள்.
                பலமுறை விபத்துகளைச் சந்தித்தவர்கள் இன்றும் நம்பிக்கையோடு சாதனை புரிகிறார்கள்.
                சிலர் எப்போதும் தங்களைப் பற்றியே குறைகூறிக் கொண்டிருப்பார்கள். நான் ஏன் தான் பிறந்தேனோ? என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் உயிரோடு இருப்பதே பூமிக்குப் பாரம் தான்என்பார்கள்.
                இத்தகையவர்களை உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள் வாழ்நாள் முழுக்க நோயாளிகளாகவே இருப்பார்கள்;எதையும் சாதிக்காத நடைபிணங்களாகவே நடமாடுவார்கள்.
                “தன்னம்பிக்கை இல்லாத மிருகம், பறவை போன்ற உயிரினங்கள் இருப்பதாக இதுவரை எந்த உயிரியல் அறிஞரும் கூறியதாக நான் கேள்விப்பட வில்லை. துரதிருஷ்ட வசமாக தன்னம்பிக்கை இல்லாதவர்களை மனித இனத்தில் மிகவும் அதிகமாகக் காணமுடிகிறதுஎன்கிறார் மா. பொ.சிவஞானம் அவர்கள்.
                நீ குணமாகிவிடுவாய் என்கிறார் மருத்துவர். அவன் குணமாகி விடுகிறான். இங்கு மருந்தைவிட அருமருந்து அவன் கொண்ட நம்பிக்கை!
                எனக்குத் தெரிந்த ஒரு நோயாளி ஒரு போலி வைத்தியரிடம் போனார். அவரிடமிருந்து பணம் பறிப்பதற்காக போலி வைத்தியர், இந்தநோய் குணமாவதே கடினம். ஐம்பதாயிரம் தந்தால் நான் தீர்க்க முயற்சி செய்கிறேன் என்று பாதி பணமும் வாங்கினார். ஒரு வாரத்தில் நோயாளி இறந்து போனார்!
                ஆனால் அதே நோய், அதைவிட மோசமான நிலைமையில் இன்னொருவர். மருத்துவரையும் மனநோய் மருத்துவரையும்  சேர்த்துப் பார்த்தார். ஒருவர் மருந்தையும் இன்னொருவர் நம்பிக்கையையும் ஊட்டினார். நோய் தீர்ந்து இன்று அவர் வேலைக்குப் போகிறார்!
                இது தான் நம்பிக்கையின் சக்தி; தன்னம்பிக்கையின் வெற்றி!
                ஒருவன் அடைகின்ற தோல்விக்குக் காரணம் திறமையின்மை அல்ல; தன்னம்பிக்கை இன்மைதான்.  தன்னால் இதை செய்து முடிக்க இயலும் என்று துணிவுடன் செயலில் இறங்கினால் என்றேனும் ஒரு நாள் வெற்றி நம் காலடியில் வந்து விழும்.
                200 முறைக்கு மேல் தன் சோதனையில் தோல்வியுற்றும் தன்னம்பிக்கையை இழக்காமல் போராடியதால் மின்விளக்கைக் கண்டு பிடித்தார் தாமஸ் ஆல்வா எடிசன். இத்தனை முறை தோற்று விட்டீர்களே இனி மின்விளக்கைக் கண்டு பிடிக்க முடியாது இல்லையா?” என்று கேட்டவர்களிடம் எடிசன் கோபத்தோடு சொன்னார்,  “எப்படி செய்தால் விளக்கு எரியாது என்பதற்கு இருநூறுக்கு மேல் காரணங்களை கண்டுள்ளேனேயொழிய நான் தோற்றுப் போகவில்லை.என்றார். ஆயிரத்து எண்பத்து நான்கு கண்டு பிடிப்புகள் இன்று எடிசனை புகழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் தன்னம்பிக்கைதான்.
                பள்ளிக்கூடம் விட்டு மாணவர்கள் சிலர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வழியாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு மாணவன் மட்டும் வெள்ளை மாளிகைக்குள் நின்று கொண்டிருந்த சனாதிபதி கெனடியை உற்று நோக்குகிறான். என்ன வேண்டும் என வினவுகிறார் கெனடி.. என்றாவது ஒரு நாள் அமெரிக்காவின் சனாதிபதியாகி இந்த வெள்ளை மாளிகையில் உலா வருவேன்என்றான். கெனடியால் வியப்போடு பார்க்கப்பட்ட அந்த மாணவன்தான் பிற்காலத்தில் அமெரிக்காவின் சனாதிபதியான பில் கிளிண்டன்.
                ஆறாம் வகுப்பில் படிக்கும் போது ஒரு மாணவன் சொன்னான் ‘I will rule Italy’. உடனே எல்லோரும் இத்தாலியை ஆள போற மூஞ்சியைப் பாரென்று கேலி பேசினார்கள். அவன் தான் இத்தாலியின் சர்வதிகாரி முசோலினி. எட்டு வயதில் பிரான்ஸ் நாட்டில் ஒரு சிறுவன்,  ‘அம்மா உன் மகனைப் பற்றி நீ கவலைப்படாதே அவன் பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தி  என்றான். அவன் வேறு யாருமல்ல      முடியாது என்ற வார்த்தை என் அகராதியிலேயே இல்லைஎன்ற மாவீரன் நெப்போலியன் தான்.
                உயர்ந்த லட்சியத்தை மனத்தில் இருத்தி அதை அடைந்தே தீருவது என்று செயல்பட்டால், போராடினால் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் தானே வந்து சேரும்.
                விறகு வெட்டியின் மகன் ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க சனாதிபதியானதும், செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் ஸ்டாலின் ரஷ்ய அதிபரானதும், வீடு வீடாக தினசரி பத்திரிகைப் போட்டு அரசு பள்ளியிலேயே தமிழ்வழியில் படித்து அறிவியல் மேதையான அப்துல் கலாம், இன்று இந்தியாவின் சனாதிபதியாக உயர்ந்துள்ளதும் தன்னம்பிக்கையாலும் அதனால் விளைந்த விடாமுயற்சியாலும் தான்!
                தன்னம்பிக்கை இல்லாதவனை கடவுளே புறக்கணித்து விடுவார்.
                விவிலியத்தில் இடம் பெற்றுள்ள தாவீதிடம் இருந்தது நம்பிக்கையும் தன்னம்பிக்கையும்தான். சிறுவனென்றோ, கோலியாத்தை வீழ்த்த முடியாதென்றோ அவர் அவநம்பிக்கை கொள்ளவில்லை. அதுபோல் மகாபாரதத்தில் பாண்டவர்களிடம் இருந்த வீரர்களோ  குறைந்த எண்ணிக்கை. ஆனால் பெருமளவில் இருந்தது தன்னம்பிக்கை.
                படிக்கிற மாணவன் தன்னால் படிக்க முடியும் என்று தன்னம்பிக்கைக் கொள்ள வேண்டும்.
                ஆராய்ச்சி செய்கிறவன் தன்னால் புதியன கண்டு பிடிக்க இயலும் என எண்ண வேண்டும்.
                பெண்கள் எல்லாம் ஒரு காலத்தில் சமையலறையிலும் கட்டிலறையிலும் மட்டுமே இருக்க வேண்டிய கட்டாய நிலை இருந்தது. இன்றோ நிலைமை தலைகீழாக உள்ளது.
                அவர்களும் தன்னம்பிக்கை பெற்றார்கள். எழுச்சியோடு வீட்டிற்கு வெளியில் வந்து கல்வி கற்றார்கள்; தைரியத்தோடு வேலைக்குச் செல்கிறார்கள்.
                இன்று சாதாரண கடைகள் துவங்கி ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி, நாட்டின் ஆட்சிப் பொறுப்பென்று அத்தனைத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக நின்று அசத்துகிறார்கள்.
                நான் மணலிக்கரை மரியகொரற்றி பள்ளியில் மாணவனாக பயிலுகின்ற போது பத்து பெண்களுக்கு மேல் அங்கு ஆசிரியையாக பணிபுரிய வில்லை. இன்று சுமார் எண்பது பேரில் ஐம்பது பேருக்கு மேல் பெண்களே ஆசிரியைகளாக பணி செய்கிறார்கள். பத்து வருடம் தாண்டினால் பத்து சதம் கூட ஆண்களுக்கு கிடைக்காது என்பது நாளைய நிஜம்.
                ஆண் கற்றால் அவன் மட்டும் பயனடைகிறான். பெண் கற்றால் குடும்பமே பயனடையும் என்பார்கள். சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்கள் தன்னம்பிக்கையோடு எழவில்லை என்றால் சமூகம் வீழ்ந்திருக்கும்.
                இந்த நிலை எப்படி உருவானது? ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். தங்கள் வாழ்க்கை மீதும் திறமை மீதும் பெண்கள் கொண்ட தன்னம்பிக்கை!
                தன்னம்பிக்கையோடு ஊறுகாய் வியாபாரம் செய்தவன் லட்சாதிபதியாகியிருக்கிறான்.
                விடா முயற்சியோடு கட்டிடத் தொழில் கற்றவன் ஊர் முழுக்க பெயரோடும் புகழோடும் செல்வத்தோடும் வாழுகிறான்.
                என் சகோதரர்  ஒரு மேஜை நாற்காலியைக்  கொண்டு தனது கட்டிட வரைபடப் பணியைத் தொடங்கினார். இன்று சொந்தமாக ஐ.டி.ஐ. நடத்தும் அளவுக்கு உயர்ந்துள்ளார். தன்னம்பிக்கையும், ஓயாத உழைப்பும் தான் இந்த உயர்வுக்குக் காரணம்!
                எனக்குத் தெரிந்த இன்னொரு நபர் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் மூன்று ரப்பர் கம்புகளை பிணைத்துக்கட்டி அதில் வாடகைத் தராசு ஒன்றை தொங்கவிட்டபடி சாலையோரத்தில் தென்னை ஈக்கில், ரப்பர் கொட்டை வாங்கிக் கொண்டிருந்தார். இன்று மூன்று கடைகளை நிர்வகிப்பவராக தன் மக்களையும், மனைவியையும் பொருளாதார சிக்கல் இல்லாமல் மகிழ்வோடு வாழவைத்துக் கொண்டுள்ளார். எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்தும் அவர் தன்னம்பிக்கையைக் கைவிடவில்லை.
                “இளைஞர்களே! நம்புங்கள்! நீங்கள் மகத்தான சாதனைகள் புரியப் பிறந்தவர்கள். உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க இதுவே உரிய தருணம்எனகிறார் வீரத்துறவி விவேகானந்தர்.
                யானையின் பலம் தும்பிக்கையில் இருக்கிறது; மனிதனுடைய பலம் தன்னம்பிக்கையில் இருக்கிறது.!

                ஆகவே, நம்பிக்கையோடும் தன்னம்பிக்கையோடும் வாருங்கள்! வளருவீர்கள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக