செவ்வாய், 19 ஜூலை, 2016

KAMARAJAR

தாழக்கிடந்தோரை தற்காத்துத் தூக்கியவர் காமராசர் - எழுத்தாளர் குமரி ஆதவன்
“மனிதர்கள் பல காரணங்களுக்காகப் புகழப்படுகிறார்கள். இந்தப்புகழ் யாருக்கு நிலைத்து நிற்குமென்றால், தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவர்களுக்கு மட்டும்தான். இத்தகைய வாழ்க்கையை வாழ்ந்து வரலாறாய் நிற்கிறார் காமராசர். ஒரு நாட்டின் வளர்ச்சி கல்வி வளர்ச்சியில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து தமிழகத்தின் கிராமங்களில் இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களை திறந்த தீர்க்கதரிசி. காமராசர் கொண்டுவந்த திட்டங்களைப் பிற மாநிலங்கள் முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் அமலப்டுத்தின என்பதிலிருந்து அவரது தொலைநோக்குப் பார்வையை அறியலாம். தலைவன் என்ற சொல்லுக்கு அனைவருக்கும் புரியும்படியான அர்த்தம் காமராசர் தான்.
ஆளுயர கட்டவுட்டுகள் வைக்காமல், அலங்கார மேடைகள் செய்யாமல், புழுதியைக் கிளப்புகின்ற நூற்றுக்கணக்கான கார்களின் அணிவகுப்பு இல்லாமல், ராணுவமோ கறுப்புப் பூனையோ பாதுகாக்காமல் ஒர் உன்னத தலைவன் தமிழகத்தின் ஒவ்வொரு குக்கிராமங்களுக்குள்ளும் நுழைந்து மக்கள் குறைகேட்டு ஆட்சி செய்தார் என்றால் இன்றைய இளைய தலைமுறை நம்புமா என்ற ஐயம்கூட எனக்கு எழுகிறது. பதவி கிடைத்தால் இறுகப் பற்றிக் பிடித்துக் கொள்வோர் மத்தியில் பதவியைத் துறந்து மக்கள் பணியாற்றச் சென்ற ஓர் அறத்துறவி.
ஒன்பது ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த ஒரு மனிதர், இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்து பரிபாலனம் நடத்திய ஓர் ஆளுமைச் சிற்பி, மூன்று முறை பிரதமர்களை உருவாக்கிய தலைவர் இறந்த பிறகு அவர் தங்கியிருந்தத வீட்டைச் சோதனையிட்டார்கள். அவரிடமிருந்த பணம் நூற்றம்பது கூடத் தேறவில்லை. தன் பெயரில் தனக்கென வங்கிக் கணக்கே வைத்துக் கொள்ளாத உலகின் ஒரேத் தலைவனை இந்திய நாடு கண்டு வியந்தது. இன்று சமூகப் பணியாற்றுவோருக்கு ஆன்ம சக்தியாக விளங்குபவர் காராசர்தான்.
காமராசரை படிக்காத மேதை என்பார்கள். ஆனால் ஆங்கிலத்தில் உள்ள கோப்புகளைப் படித்து, தவறுகளைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு ஆங்கில அறிவும் புலமையும் காமராசருக்கு இருந்தது. நெருக்கடியான நேரங்களிலெல்லாம் இந்தியாவை காப்பாற்றியவர் காமராசர். ஏழை எளிய மக்களின் துயரங்களைப் போக்குவதற்காக அவர் ஏற்றுக் கொண்ட சிலுவையை மரணம் வரை அவர் கீழிறக்கவே இல்லை. இன்றைய அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான செயல் காமராசரின் புகழை உயர்த்திக் கொண்டேப் போகிறது. அவர் எந்தச் சாதிச் சிமிழுக்குள்ளும் அடங்கமாட்டார். அப்படி அடைப்பது நாம் அவருக்குச் செய்கிற அநீதி; பச்சைத் துரோகம். தாழக்கிடந்தோரை தற்காத்துத் தூக்கிய காமராசர் தேசத்தின் சொத்து”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக