திங்கள், 25 ஜூலை, 2016

தெரு நாயும் ஊழையும் - குமரி ஆதவன்

தெரு நாயும் ஊழையும்
- குமரி ஆதவன்

அது -
ஊர்தலைவனின் அடிவருடி நாய்;
தலைவனின் எச்சிலைச் சாப்பிடுவதால்
குரைக்கக்கூடத் தெரியாத நரைநாய்
தலைகால் புரியாமல் துள்ளும்
சளுவாய் வடித்தபடி ஊழையிடும்
திடீரென சாக்கடையில் புரளும்
ராத்திரியில் ஊழையிடத் தெம்பில்லாமல் மூணும்
புண்ணாகிச் சீழ்வடியும் வாலை அசைத்தபடி
தெருக்கோடியில் மல்லாந்து கிடக்கும்.


தெருநாய் கூட்டம் வந்தால்
மெல்ல எழுந்து பின்னால் நடக்கும்
அவ்வப்போது கடி பிடிக்கும்
மீண்டும் அணைத்துச் சுகம்காணும்;
மனிதர்கள் வந்தால் முயன்று உறுமும்
மகான்களைக் கண்டால்
ஒன்று சேர்ந்து துரத்தும்
அச்சமின்றி எதிர்த்தால் பதறி ஓடும்.

எப்போதும் ஊழையிடுகிற
சளுவாய் வடிக்கிற
கண்ணைத் துருத்துகிற அந்நாயை
கிறுக்குப்பிடித்து அலைவதாய்த்தான் ஊரார் நினைத்தனர்.

ஒரு நாள் ...
தலைவனின் தலைவன் வந்தான்
ஆள் தெரியாத அல்பநாய்
சளுவாய் வடித்தபடி ஊழையிட்டுக் கொண்டே
முன்னால் சாடிப் போனது.
ஏற்கனவே
ஊர்கோடியில் கூட்டம்போட்டு குரைத்தநாய்
மீண்டும் தன்னைக் கடிக்கப்போவதாய் எண்ணி
நாட்டுத்துப்பாக்கியால் சுட்டான்
குறி தவறவில்லை.

கபடப் பாம்பு
- குமரி ஆதவன்

ஏற்கனவே
பலரைத் தீண்டியக் கபடப்பாம்பு
ஒருநாள் எலியைத் துரத்தியது
அச்சப்பட்டுப்போன எலி
கறையான் புற்றுக்குள் தஞ்சமடைந்தது;
இரையுள்ள இடத்தில் சாய்ந்துவிடும் பாம்பு
புற்றுக்குள் மெல்ல நுழைந்து
அகோர பசியோடு
எலியைத் தின்று ஏப்பம்விட்டது.
மறுநாளில் ...
மெதுவாய் புற்றுக்குள்ளிருந்து தலை நீட்டியது ...

இடத்திற்கு ஏற்றார்போல்
நெழிவதையும் குழைவதையும்
காலில் விழுதலையும்
குழி தோண்டுதலையும்
குணமாய்க் கொண்ட விஷப்பாம்பின் கதை
பலருக்கும் தெரியவில்லை;
ஏமாறுதலையே வாழ்வாக்கிக்கொண்ட
பாமரக்கூட்டம் பாலூற்றி வளர்க்கிறது!


நான் மட்டும் அழுகிறேன் ...
ஊருக்காகவா?
பக்தருக்காகவா?
வழிப்போக்கருக்காகவா?
இல்லவே இல்லை.

பெரிய பூசாரிக்காக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக