திங்கள், 25 ஜூலை, 2016

கலப்பை - குமரி ஆதவன்

கலப்பை 
-  குமரி ஆதவன்

ஈரேழு மாடும் கலப்பையும் வைத்திருந்தார் தாத்தா.
வீடுபோல் நீண்டு கிடக்கும் மாட்டுத்தொழுவத்தில்
கலப்பையும் மரமும் வைக்க அறையொன்று இருந்தது
புரட்டாசி பொறந்தா தாத்தா குசியாயிடுவார்
கலப்பையை தோளில் சுமந்தபடி
மாட்டை ஓட்டிக்கொண்டு மார்பு விரித்து நடப்பார்.
வேட்டியின் முந்தியைச் சுருட்டி
கால்களுக்கிடையே கொண்டு சென்று
பின்னிடுப்பில் குத்துத்தார் செருகும்போது
வலிமையான கால்கள் உழைப்பை உலகுக்குச் சொல்லும்.
மாட்டைப் பிடித்து களியக்குச்சிக்குள் கழுத்து இருக்குமாறு
கலப்பை நுகத்தில் பூட்டாங்கயிறால் கட்டுவார்.
கலப்பையின் யாக்காலை
சுள்ளாப்போடு சேர்த்து வடத்தால் கட்டிவிட்டு
கலப்பைக் குத்தியில் பழபழவென்று மின்னும்
கொழுவைத் தடவிப் பார்ப்பார்.
மேளியைப் பிடித்து அழுத்தியபடி
டுர்ர்..டுர்ர்..டுர்ர்...என்று ஓசை எழுப்ப,
மாடு கலப்பைக்குத்தியை இழுத்தபடி நடக்கும்.
வயலின் ஒரு ஓரத்தில் துவங்கி சால் பிரித்து உழ,
முதல் வட்டம் விழும்போதே
பூமித்தாய் இதழ் மலர்த்திச் சிரிப்பாள்.
ஒரு சால் முடிந்ததும் புதிய சால் போடுவார்.
எந்த இடமும் விடுபடாமல் சால்பிரித்து உழுவது
அதிசயமாய் இருக்கும்.
உழுது முடித்து மரமடிக்க தயாராய்,
கலப்பைக் குத்தியை மாற்றிவிட்டு
மரத்தின் குறுங்காவளையத்தை
வள்ளக்கையோடு இணைப்பார்.
மரமடித்து முடித்தால்
வயல் குளம்போல் காட்சி தரும்.
தயாராய் நிற்கும் தாய்மார்கள் நாற்றுநடத் துவங்குவர்.
நிலம் பச்சைப் பட்டுடுத்தி சிரிக்கும்போது
வாளிநிறைய கஞ்சியை உறுஞ்சியபடி
வாய்திறந்து சிரிப்பார் தாத்தா.
இப்போது தாத்தாவும் மாட்டுத்தொழுவமும்  இல்லை
நெல்நடவு நிறுத்தி ஆண்டு பலவாயிற்று
காட்சிப்பொருளா இருக்கும் கலப்பையில்
ரப்பர்சீட் காயப்போடுவா வீட்டம்மா!


பத்தாயமும் பாச்சா பல்லிகளும்
- குமரி ஆதவன்
தாத்தாவைப்போல்
விளைந்து கறுத்த பலாமரத்தில்
பத்தாயம் செய்து
அப்பாக் கல்யாணத்துக்குப் பரிசு கொடுத்தார்
வயல் அறுத்து தலையடி நெல்லை உலர்த்தி
ஆனி ஆடி மழை காலத்திற்கென்று
பத்தாயத்தில் போட்டு வைப்பார் அப்பா!

அப்பாவுக்கு பத்தாயம் ரெம்பப் பிடிக்கும்
இரவு தூக்கமும் பத்தாயத்து மேலத்தான்.
அப்பா நெஞ்சுமேல படுத்துக் கதகேட்டா
அறிவும் வளரும் அயர்ந்த தூக்கமும் வரும்.
காலையில, நெல்லை ஈரமாக்கிட்டதா
அம்மாவின் சத்தமும் கேட்கும்.
இந்தப் பத்தாயத்துக்குக் கத பலதும் உண்டு.

எனக்கு அப்போ எட்டு வயசிருக்கும்
ஒருநாள் பெரியம்மை நோய்க்குத் தடுப்பூசிப்போட
சுகாதார அலுவலர் வந்தார்
அவரை உருக்குத்துக்காரர் என்பதே வழக்கம்.
வீட்டில் யாருமின்றி அண்ணனும் நானும்
நடுங்கியபடி இருந்தோம்
உருக்குத்துக்காரர் அருகில் வருவதற்குள்
கையைப்பிடித்து இழுத்தான் அண்ணன்.
ஓடமுடியாமல் தயங்கியதும்
உருக்குத்து படாமல் காப்பாற்ற
புதிய வழியொன்று செய்தான்.
பாதி நெல்நிறைந்து கிடந்த பத்தாயத்திற்குள் 
இறங்கச் சொல்லி கால்களை மடக்கி உட்காரவைத்தவன்
பத்தாயத்தை மூடி அதற்குமேல் ஓலைப் பாயை விரித்துவிட்டு
வடக்குவாசல் வழியே ஓடிப்போனான்.
மூச்சு வாங்க இயலாமல் நான் திணற
உருக்குத்துப் பயம் எனைத்தழுவ
கீறல் விழுந்திருந்த பத்தாய இடையில்
மூக்கை வைத்தபடி வேர்த்திருந்தேன்.
ஒருசில நிமிடங்களில் உருக்குத்துக்காரர் வந்தார்.
யாருமில்லையா எனச் சப்தமிட்டார்.
வீட்டிற்குள் ஏறிய அவரது காலடிச்சத்தம்
என் இதயத்துடிப்பை அதிகமாக்கியது
இருந்தாலும் அசையவில்லை.
உருக்குத்துக்காரர் அடுத்தவீட்டிற்குப் போனார்.
உள்ளே இறங்கிய எனக்கு வெளியேவரத் தெரியவில்லை.

கால்மணி நேரத்தில் குளிக்கப்போன அக்கா வந்தாள்.
தம்பி ... தம்பி ... என்றாள்.
அக்கா பத்தாயத்துக்குள்ள இருக்கேன் எனச் சப்தமிட்டேன்.
ஏதோ குரல்கேட்டு பத்தாய அறைக்குள் வந்தவள்
என் முனகல்கேட்டு பாய்நீக்கித் திறந்தாள் பத்தாயத்தை.
ஒரு பூதத்தைப்போல் நான் வெளியே வந்தேன்.
மூச்சை நீட்சியாய் விட்டபடி
உருக்குத்துக்காரன் போய்டானா என்றேன்.
உருக்குத்துக்காரனுக்குப் பயந்து
இப்ப உசுரு போவஞ்சுதே  என்று அணைத்துக்கொண்டாள்.
இப்போது நினைத்தாலும் உசுரு துடிக்கத்தான் செய்கிறது.

இப்போ -
ரெடிமேடு சாப்பாடு எப்போதும் கிடைப்பதால்
நெல்லுபோட்டப் பத்தாயத்தில் நெல் இல்லை.
பல்லியும் பாச்சாயும் கூடுகட்டி வாழுகிறது
ஏகதேசம் எங்கநாடும் எங்கமனசும் அப்படித்தான்

ஏகாதிபத்தியத்தின் குப்பைத்தொட்டிகளாக.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக